×

தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி

சென்னை: தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. மீராவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். சினிமா நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மீரா சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீரா நேற்று முன்தினம் தனது நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில், நேற்று அதிகாலை மீரா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மீராவின் உடலை தேனாம்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, மீரா தற்கொலை செய்து கொண்ட அவரது அறையில் இருந்த நோட்டு புத்தகங்களில் எழுதி வைத்திருந்த கடிதம், மற்றும் அவர் பயன்படுத்திய செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உடற்கூறு ஆய்வு முடிந்து நேற்று மதியம் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள் அஞ்சலிக்காக மீராவின் உடல் வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் உடன் படித்த சக மாணவர்கள், சினிமா பிரபலங்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மீராவின் உடலை வேனில் ஏற்றும் போது, அவரது தாய் பாத்திமா, சகோதரி லாரா ஆகியோர் தனது மகள் மற்றும் அக்காவின் முகத்தை இறுதியாக பார்த்து கதறி அழுதது அங்கு இருந்த பொதுமக்களிடையே கண்ணீர் வர வழைத்தது. பிறகு இன்று காலை மீராவின் உடல் வேனில் ஏற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக உடல் எடுத்து செல்லப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேன் பின்னால் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இறுதியாக கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

The post தற்கொலை செய்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: சினிமா பிரபலங்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Mira ,Vijay Antony ,Chennai ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...